சென்னை: கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தடுப்பு பணி, பாதிப்புகளை ஈடு செய்ய கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசுகளுக்கு வழக்கமாக வழங்கும் நிதி போல் அல்லாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் ஜிடிபி மற்றும் மாநிலங்களின் ஜிடிபி பங்களிப்பின் அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகள் கூடுதல் கடனுதவியாக ரூ.1 லட்சம் கோடி கடன் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இக்கட்டான இதுபோன்ற தருணத்தில், தனது கோரிக்கையை பிரதமர் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.